இத் தேர்தலில் 19 பேர் போட்டியிடுகின்ற போதிலும் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும் பொது எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனாவிற்கும் இடையிலேயே நேரடிப் போட்டி நிலவுகிறது.
தேர்தல் அறிவிப்பு வெளியிடும் போது “மகிந்த ராஜபக்ஷ அணி” பலமானதொரு அணியாகவே விளங்கியது. நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்குள்ள வரம்பற்ற அதிகாரங்கள் – வரப்பிரசாதங்கள்> பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மை பலம்> மகிந்த ராஜபக்ஷவின்; குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கிய அமைச்சுக்கள் – பொறுப்புக்கள்> வடக்கு மாகாண சபை தவிர்ந்த ஏனைய மாகாணசபைகளின் ஆட்சி அதிகாரம்> உள்ளுராட்சி சபைகளின் அதிகாரங்கள் என மிகப்பெரும் பலமிக்க அணியாகேவே விளங்கியது.
இதற்கப்பால் பௌத்த பேரினவாத செல்வாக்குக் கொண்ட ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஆதரவும் அவராட்சிக்கு இருந்து வந்தது. எதிர்க்கட்சியின் பலவீனமான நிலையும் ஆளும் தரப்புக்குச் சாதகமாகவே அமைந்திருந்தது.
சிறுபாண்மை இனங்களைப் பொறுத்தவரை முஸ்லிம்> மலையகத் தமிழர்களின் வாக்குப் பலம் கொண்ட அனைத்துக் கட்சிகளும் அவருடன் இணைந்திருந்தன. வட - கிழக்கில் அவர் தனது ஆதரவுத்தளத்தைப் பெருக்குவதில் பெருமுயற்சிகளை மேற்கொண்டு சிறு வெற்றிகளையும் பெற்றிருந்தார்.
சீனாவின் நிபந்தனையற்ற ஆதரவு> இந்தியாவின் தலையீடின்மை எனப் பலவழிகளிலும் “மகிந்த ராஜபக்ஷ அணி” பலமானதொரு அணியாகவே விளங்கியது. இந்தப் பலமான நிலை அவர்களை “எதையும்” செய்யும் நிலைக்கு இட்டுச் சென்றது.
இந்தப் பலமான நிலையில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்து விட்டு நிழலுடன் தான் போட்டியிடுகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது வரை பொது எதிரணி பலவீனமானமானதொன்றாகவே தோற்றமளித்தது. பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சி சார்பில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி> முன்னாள் ஐனாதிபதியான சந்திரிகா மற்றும் அரசாங்க எதிர்ப்பாளர்கள் சிலரும் இணைந்து பொது எதிரணி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனாவை அறிவித்துக் களமிறங்கியதுடன்- பொது எதிராணி பலமான எதிராணியாக மாற்றமுற்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர்> அமைச்சர் என ஆளும் கட்சியின் முக்கியஸ்தராக இருந்தவரும் முதல் நாள் ஜனாதிபதியின் அலரிமாளிகையில் “ஜனாதிபதியுடன் ஒன்றாக இருந்து முட்டை அப்பம் உண்ட” வருமான மைத்திரிபால சிறிசேனா சில முக்கிய சகாக்ககளுடன் பிரிந்து வந்து பொது எதிரணியில் இணைந்து கொண்டு> பொது வேட்பாளராகவும் களமிறங்கியிருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து கட்சித் தாவல்கள் அதிகரித்துள்ளன. தொடர்ந்து ஆளும் தரப்பிலிருந்து பலர் எதிரணிக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
மற்றொரு முக்கியமானதும் இனவாத நிலைப்பாடு கொண்டதுமான ஜாதிக ஹெல உறுமயவும் பொது எதிரணி வேட்பாளருக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது. முக்கிய அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைக்கெதிரான பிரச்சாரம் ஒன்றைத் தனித்து நின்று நடாத்தி வருகிறது.
ஆளும் கட்சியுடன் இணைந்திருந்த முஸ்லிம்கள் சார்பிலான கட்சிகளில் பல பொது எதிரணியுடண் இணைந்துள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இறுதிநேரத்தில் பொது எதிரணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.
மலையக மக்கள் விடுதலை முன்னணி கட்சி சார்பாக பொது எதிரணிக்கு தனது ஆதரவினைத் தெரிவித்திருக்கிறது. எனினும் அக்கட்சியின் தலைவி மகிந்த ராஜபக்ஸவிற்கு தனது ஆதரவினைத் தெரிவித்திருக்கிறார். வேறு சிலர் எதிரணிக்கு மாறியிருக்கிறார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதிநேரத்தில் பொது எதிரணிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மகிந்தவிற்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கி தேர்தல் பிரச்சாரப் பணிகளில் தீவிரவமாக ஈடுபட்டும் வருகிறது. பொதுபலசேனா எனும் பௌத்த தீவிரவாத அமைப்பு மகிந்தவிற்கு ஆதரவினை வழங்கியிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் சிலர் மகிந்தவுடன் இணைந்திருக்கிறார்கள்.
பல்வேறு தரப்பினரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் எனக் குறிப்பிட்டு வருவதுடன்> பல்வேறு அரசியல் கட்சிகள்> மதத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தேர்தலில் களமிறங்கியிருக்கிறார்கள்.
பதவிக்காலம் இரு ஆண்டுகள் இருக்கின்ற நிலையில் தனது வெற்றிக்கான வாய்ப்புக்களை கருத்தில் கொண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார் மகிந்த ராஜபக்ஷ. ஆனால் இன்றைய களநிலவரமானது, “இலங்கை வாக்காளர்களுக்கு ஜனநாயக ரிதியான தெரிவை மேற்கொள்வதற்கு எதிர்பாராத ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது” என்பதாகவே அமைந்திருக்கிறது.
ஜனாதிபதித் தேர்தல் சுமகமாக நடைபெறுமா? ஆட்சி மாற்றம் ஏற்படுமா? அல்லது நாடு சர்வாதிகரப் போக்கிற்குள் தள்ளப்படுமா? என்ற வினாக்கள் நிலவுகிற போதிலும் தேர்தல் பிரச்சாரங்கள் வன்முறைகளுடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
Vijey - 01.01.2015