வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

வட மாகாண சபைத் தேர்தல் களம்.


வட மாகாண சபைத் தேர்தல் களம்.

இலங்கையில் வட மாகாண சபை> வட மேல் மாகாண சபை> மத்திய மாகாண சபை ஆகிய மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடைபெறவுள்ளன. வேட்பு மனுத்தாக்கல்கள் ஒக்டோபர் 01 ஆம் திகதி நண்பகலுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தல்கள் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறுமெனத் தேர்தல் ஆணையாளர் அறிவித்திருக்கிறார்.
1987 ஆம் ஆண்டு 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கயைம உருவாக்கப்பட்ட வட கிழக்கு மாகாண சபை 2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி உயர் நீதிமன்ற தீர்ப்புக்கமைய வடக்கு> கிழக்கு மாகாண சபைகளாக தனித்தனியாகப் பிரிக்கப்பட்டதையடுத்து நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவாகும். 
வட மாகாணத்தில் யாழ்ப்பாணம்> மன்னார்> வவுனியா> கிளிநொச்சி> முல்லைத் தீவு அகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட 7 இலட்சத்து 14 ஆயிரத்து 488 வாக்காளர்கள் 36 மாகாண சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்க உள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 உறுப்பினர்களும் வன்னி மாவட்டத்தில் 20 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் இரண்டு போனஸ் உறுப்பினர்களும் நியமிக்கப்படுவுள்ளனர்.
தமிழரசுக் கட்சி(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு)> ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி> ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்> ஐக்கிய தேசியக் கட்சி> மக்கள் விடுதலை முன்னணி உட்பட 11 அரசியல் கட்சிகளும் 08 சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு> தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளர் தெரிவு பெரும் சர்ச்சையையும் எதிர்பார்ப்புக்களையும் தோற்றுவித்திருந்த நிலையில்> பொது வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். தமிழரசுக் கட்சியினால் முதன்மை வேட்பாளராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த அக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசா முதன்மை வேட்பாளர் போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொண்டதனையடுத்து முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி தனித்துப் போட்டியிடலாம் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்தே போட்டியிடுகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளராக ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா போட்டியிடலாம் எனத் தெரிவிக்கபட்டு வந்த போதிலும்> அக் கட்சி சார்பில் முதன்மை வேட்பாளராக எஸ்.தவராஜாவே போட்டியிடுகிறார். டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைவாக வடமாகாண சபைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை எனத் தெரிவித்திருக்கிறார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முதன்மை வேட்பாளராக இராமநாதன் அங்கஜன் போட்டியிடுகிறார். ஸ்ரீ ரெலோ கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து இத் தேர்தலில் போட்டியிடுகிறது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை தனித்துப் போட்டியிடுகிறது. வடக்கில் மன்னார்> முல்லைத்தீவு> வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களில் அக்கட்சி போட்டியிடுகிறது. யாழ்ப்பாணத்திலும்> கிளிநொச்சியிலும் அக்கட்சி போட்டியிடவில்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி> வட மாகாணத்தில் முன்னாள் போராளிகள் சிலரை தேர்தலில் களமிறக்கும் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் அவ்வாறானவர்கள் தேர்தலில் போட்டியிடச் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் புலிகளின் ஊடகப் பிரிவு பொறுப்பாளராக செயற்பட்ட தயா மாஸடர் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டு வந்த போதிலும் இறுதியில் அவருடைய பெயர் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை. அமைச்சரும் கட்சியின் செயலாளருமான சுசில் பிரேம்ஜயந்த்> முன்னாள் போராளிகள் ஐம்பது பேர்வரையில் போட்டியிட விண்ணப்பித்திருந்த போதிலும் அவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கெடுக்காததால் போட்டியிட அனுமதிக்கவில்லை எனத்தெரிவித்திருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்> புலிகளின் வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளராகப் இருந்த எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன் போட்டியிடுகிறார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி> வடமாகாணசபைத் தேர்தலை தமிழ் மக்களின் தேசிய அரசியலை வட மாகாணத்திற்குள் முடக்கிவிடும் நடவடிக்கை என விமர்சித்திருப்பதுடன்> வட மாகாணச் சபைத் தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தல் குறித்து வெளியிட்டள்ள அறிக்கையில்> இத்தேர்தலில் பங்குபற்றுவதா? வாக்களிப்பதா? யாருக்கு வாக்களிப்பது? போன்ற தீர்மானங்களை தமிழ் மக்களின் மனச்சாட்சிக்கு விட்டுவிடுகிறோம் எனவும் குறிப்பிட்டிருக்கிறது.
வட மாகாண சபைத் தேர்தல்> தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும்> ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் .பி.டி.பிக்கும் இடையிலானதோர் பலப்போட்டியாக அமைந்திருக்கிறது. இந்தியாவும்> சர்வதேச சமூகம் வட மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டும் என வலியுறுத்தல்களை வழங்கி வந்த நிலையில் இத் தேர்தல் நடைபெறுகிறது என்பதனால் இத் தேர்தல் சர்வதேச அவதானிப்பைப் பெற்றுமுள்ளது. 


1 கருத்து:

  1. கட்டுரையை வாசித்து உங்கள் கருத்துக்கள் எழுதங்கள்.

    நட்புடன்

    விஜய்

    பதிலளிநீக்கு