செவ்வாய், 10 மார்ச், 2015

குமார தெய்வமும் குமாரர் வழிபாட்டு முறையும்.

மட்டக்களப்பு: குமார தெய்வமும் குமாரர் வழிபாட்டு முறையும். 
பகுதி -1

குமார தெய்வம் மட்டக்களப்பின்   பூர்விக குடிகளின் தெய்வம்”, 'மட்டக்களப்புக்கு மட்டும் உருத்துடைய சுதேச தெய்வம்" எனவும்  குறிப்பிடப்படுகிறது. தற்போதும் நிலவிவரும் இக் குமார தெய்வமும்> அத் தெய்வம் பற்றிய கதைகளும் – தொன்மங்களும் - பாடல்களும்> குமார தெய்வ வழிபாட்டு முறையான சடங்கும் தனித்துவம் மிக்கவை. 

கலாநிதி சி. மெளனகுரு அவர்களும் க. மகேஸ்வரலிங்கம் அவர்களும் குமாரர் மற்றும் குமார தெய்வச் சடங்கு பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். கலாநிதி சி.மெளனகுரு அவர்களின் மட்டக்களப்பு மரபு வழி நாடகங்கள்(1998) என்னும் ஆய்வு நூலிலும், க.மகேஸ்வரலிங்கத்தின் மட்டக்களப்பு வாழ்வும் வழிபாடும் (2008) எனும் நூலிலும் பல விடயங்கள் விளக்கப்பட்டுள்ளது.

குமார தெய்வம்   மற்றும் குமார தெய்வச் சடங்கு பற்றிய ஆய்வு,  மட்டக்களப்பின் வரலாறு, மக்கள் இடப் பரவல், சமூகம் பற்றி அறிந்து கொள்ள உதவும். அது மட்டுமின்றி தமிழர்களின் தொன்மையான தெய்வங்கள் மற்றும்   வழிபாட்டு முறைகள் பற்றியும் அறிந்து கொள்ளவும் உதவலாம். மேலும் இலங்கையின் தொல் வரலாற்றில் இது விரை விளக்கமற்றிருக்கும் சில விடயங்கள் குறித்துத் தெளிவனைப் பெறவும் உதவலாம். குறிப்பாக இயக்கர் பற்றிய விடயங்களை அறிந்து கொள்ளவும் உதவலாம்.
மட்டக்களப்பில் குமார தெய்வத்தினை, குமாரர் அல்லது குமாரத்தன் என அழைப்பது பொது வழக்காகும். குமாரருக்குரிய வழிபாடு சடங்கு எனப்படுகிறது. அவ்வகையில் இவ்வழிபாடு குமாரத்தன் சடங்கு எனக் கிராம மக்களால் குறிப்பிடப்படுகிறது. குமாரரை முருகன் என அதனை வழிபடுவோரும், ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர்.


குமாரர் கோவில்கள்.
மட்டக்களப்பில் குமாரருக்கென அமைக்கப்பட்டிருந்த தனிக்கோயில்களாக மூன்றைக் குறிப்பிடலாம்.
1. தளவாய் குமாரர் கோவில்
2. ஜெயந்திபுரம் குமாரர் கோவில்.
3. கிரான் குமார கோயில்.

இம்மூன்று கோவில்களையும் விட குமாரருக்கான வேறு வழிபாட்டு இடங்களையும் அவதானிக்க முடிகிறது. முக்கியமாக மட்டக்களப்பில் திருப்படைக் கோவில்கள் என அழைக்கப்படுகிற முருகன் கோவில்களில் குமார தெய்வமும் குமார வழிபாடு இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன.
1. சித்தாண்டி முருகன் ஆலயம்
சித்தாண்டி முருகன் கோயிலின் மேற்கு வெளிவாசலில்> குமாரருக்கு என தனியான ஒரு கோவில் உண்டு. இக்குமாரருக்கு தனியான சடங்கும் நடைபெறுவதுண்டு.
2. மண்டூர் முருகன் ஆலயம்
மண்டூர் முருகன் ஆலயத்தின் உட்பிரவாகத்தில் சிறிய குமாரத்தன் கோவில் அமைந்துள்ளது.
இவற்றைவிட மட்டக்களப்பின் சில பகுதிகளில் நீண்ட காலமாக குமார தெய்வச் சடங்கு நடைபெற்றும் வருகிறது.
3. லாவணி அல்லது லாவணை
கிரான், சித்தாண்டி குமாரர் தெய்வம் லாவானை எனும் இடத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது. லாவானை எனுமிடத்தில் முன்னர் இவ்வழிபாட்டு முறை நிலவியது எனவும், தற்போது மேடு ஒன்றில் குமார தெய்வச் சடங்கு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
4. முறுத்தானை கானந்தனை அக்குறாணி
முறுத்தானை, கானந்தனை, அக்குறாணி ஆகிய இடங்களில் குடியேறி வாழும் தமிழர்களாகி விட்ட வேடர்கள் மத்தியில் குமார தெய்வச் சடங்கு நிகழ்த்தப்படுகிறது எனினும், அது அவர்கள் மத்தியில் இவ்வழிபாடு பிரதானமானதொன்றாக இல்லை. அவர்களுடைய பிரதான தெய்வங்கள் வேறு.
குமார தெய்வம், குமார தெய்வ வழிபாட்டு முறைகள் தொடர்பான தற்கால நிலைமைகளை அவதானிக்கிற போது பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை தெளிவாகத் தெரியும் விடயமாகும். முக்கியமான மாற்றங்கள்,

வழிபாட்டிடங்கள் நிரந்தர கோயில்களாக மாற்றப்பட்டுள்ளமை.

மெளனகுரு அவர்கள், இக்கோயில்கள் பற்றி விபரிக்கும் போது, மண்ணாலோ, கல்லாலே கட்டப்பட்ட தனிப்பட்ட கோயில் கிடையாது. (கிராமத்தின் அல்லது காட்டின்  மத்தியிலுள்ள குறிக்கப்பட்ட மரம் ஓன்றே கோயிலுக்குரிய நிலையமாகும்.) எனவும் பந்தலிட்டு இலை, குழை, தென்னை ஓலை, காட்டுப் பூக்கள் ஆகியவற்றாற் பந்தலை அலங்காரம் செய்து தெய்வங்களுக்கு விசேட பூஜை செய்வர். எனவும் குறிப்பிடுகிறார். ஆனால் தற்காலத்தில் தளவாய்க் கோவிலும் ஜெயந்தி புரம் கோவிலும் கிரான் குமார ஆலயமும் நிரந்தர கட்டடங்களால் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடங்களில் ஏனைய தெய்வங்களிற்கும் கல்லினால் நிரந்தரப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் வருடாந்தச் சடங்கின் போது கொத்துப் பந்தல் போடும் முறை பின்பற்றப்படுகிறது.

குமாரர் ஆலயங்கள் முருகன் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளமை.

தளவாய்க் கோயிலும், ஜெயந்திபுரம் (கருவெப்பங்கேணி) கோயிலும் முருகன் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளது. ஜெயந்திபுரம் கோவிலில் முன்னர் குமாரர் இருந்து இடத்தில் தற்போது முருகன் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.  மூலஸ்தானத்தில் இருந்த குமாரர் மாற்றப்பட்டு பாலமுருகன் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளார். குமாரருக்கு தனிக்கோவில் அருகில் அமைக்கப்பட்டு, அதில் குமார் வைக்கப்பட்டுள்ளார். 

கோயிலின் பெயரும் முருகன்(குமாரர்) என்றே குறிப்பிடப்படுகிறது. தளவாயிலும் இவ்வாறான மாற்றத்தை அவதானிக்க முடிகிறது. புரதான தெய்வமாக முருகன் வைக்கப்பட்டுள்ளார். அதன் அருகில் குமாரர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டு முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

குமாரருக்குரிய வழிபாட்டுமுறை வருடாந்தம் நடைபெறும் சடங்கு ஆகும். இச் சடங்கு பாரம்பரிய முறையில் நடைபெறும். எனினும் தற்காலத்தில் குமாரர் கோவில்கள் முருகன் கோவில்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில் பூசை முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஜெயந்திபுரம் கோவிலில் குமாரருக்கும் ஆகம முறைப்படி ஐயரினால் பூசை நடைபெறுகிறது. குமாரர் சுப்பிரமணியர் எனக் குறிப்பிடப்படுகிறார். தளவாய்க் கோவிலில் வெள்ளிக்கிழமைகளில் பூசாரியினால் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. கிரான் குமார ஆலயத்தில் விசேட வழிபாடுகள் பூசாரியினால் மேற்கொள்ளப்படுகிறது. (ஆயினும் இவ்வாறு வழிபாடு நடத்தப்படுவது குறித்து முரண்பாடுகள் நிலவுகிறது.)
ஜெயந்தி புரம் கோவில் வருடாந்த திருவிழா, குமார சடங்குடனேயே ஆரம்பிக்கும் நடைமுறை இருந்து வந்துள்ள. அச்சடங்கினை வேடர்கள் வழிவந்தேர் பாரம்பரிய முறையில் செய்துவருகின்றனர். கடந்த வருடம் (2013) வெளியிடத்திலிருந்து வேடர்கள் அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் பாரம்பரிய முறையில் சடங்கினை செய்வதற்கு பல தடைகள் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆயினும் தளவாய், கிரான் கோயில்களில் வருடாந்த சடங்கு வழமை போல் பாரம்பரிய முறையில் நடைபெறுகின்றன. அச்சடங்கில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து போதிய தகவல்கள் இல்லை.
சித்தாண்டி குமாரர் ஆலயம், சித்தாண்டி முருகன் கோவிலின் பின் வீதியில் தனியாக அமைந்திருக்கிறது. அதற்கென தனிப்பட பாரம்பரிய முறையிலமைந்த சடங்கு நடைபெற்று வருகிறது.
இதனை விட கிரான், சித்தாண்டி குமாரர் தெய்வம் லாவானை எனும் இடத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது. லாவானை எனுமிடத்தில் தற்போது மேடு ஒன்றில் குமார தெய்வச் சடங்கு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
குமார தெய்வம் மற்றும் குமாரர் வழிபாட்டு முறையான சடங்கு வேடர், வேடர் வழிவந்தோருக்குரியதாக தளவாய், ஜெயந்திபுரம் ஆகிய இடங்களில் நிலவியிருக்கிறது.  லாவாணை அல்லது லாவணி எனுமிடத்திலும் முன்னர் வேடருடன் தொடர்பு பட்டே அமைந்துள்ளது. எனினும் சித்தாண்டி, கிரான் ஆகிய இடங்களில் வேடர்களுடன் தொடர்புகள் குறித்த தகவல்கள் காணப்படுகிற போதிலும் ஊர்குடிகளே இவ்வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக